தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வழக்கமான வெற்றிகளுடன் திருப்தி அடைந்து அங்கேயே தேங்கி கிடக்கும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அங்கேயே நின்று விடாமல் உழைக்கும் கலைஞர்களும் பலர் இருக்கிறார்கள். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து தங்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதன் மூலம் அவர்கள் தங்களை வெளிப்படையாக நிரூபித்துள்ளனர். ஆனால் ஒரு சில கலைஞர்கள் மட்டும் வெறுமனே தங்கள் வெற்றியையும் தாண்டி, தங்கள் சினிமாத்துறையை அடுத்த நிலைக்கு உயர்த்துகிறார்கள். கிச்சா சுதீபா அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக பல ஆண்டு காலமாக இருந்து வருகிறார். கிச்சாவாக தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர், ராம் கோபால் வர்மாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி பாலிவுட்டிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகராக மாறியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘நான் ஈ’ படத்தில் வில்லத்தனமான நடிப்பால் வெகுஜன ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது அவர் பயில்வான் என்ற அகில இந்திய படத்தின் மூலம் மிகவும் மிகப்பெரிய அலைகளை உருவாக்கியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது பயில்வான்.
ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிக்க, கிருஷ்ணா இயக்கும் இந்த திரைப்படம் எமோஷன் மற்றும் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமா. இதில் கிச்சா சுதீபா ஒரு மல்யுத்த வீரராக, தன் கனவுகளை நனவாக்க அவர் மேற்கொள்ளும் பயணத்தையும், அதில் அவர் சந்திக்கும் சவால்களை பற்றிய கதை. அகான்ஷா நாயகியாக நடிக்க, மிகவும் திறமையான மற்றும் பிரபலமான நடிகர் சுனில் ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் கிருஷ்ணா இது குறித்து கூறும்போது, “பயில்வான் கதையை செல்லுலாய்டில் உருவாக்கும் இந்த பயணம் ஒரு சிறந்த கற்றல் அனுபவம். இது போன்ற மிகவும் பிரமாண்டமான படத்தை உருவாக்குவதையும் தாண்டி ஹாலிவுட், பாலிவுட், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக நான் கருதுகிறேன். முன்னணி நடிகர்களை தவிர, சுஷாந்த் சிங், கபீர் துஹான் சிங், ஷரத் லோகித்ஸவா, அவினாஷ் மற்றும் பலருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசரில், கிச்சா சுதீபாவின் சட்டையில்லா தோற்றம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அது பற்றி எஸ்.கிருஷ்ணா கூறும்போது, “ஆம், படத்தை வடிவமைக்கும்போதே, நான் தனிப்பட்ட முறையில் சுதீபா ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன், அப்படி உருவானது தான் சட்டையில்லாத தோற்றம். நிச்சயமாக, அவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு முற்றிலும் ஆதரவாக இருந்தது. அவரது அபாரமான உடலமைப்பு எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இருந்தது” என்றார்.
கிச்சா சுதீபாவின் குத்துச்சண்டை போஸ்டர்கள் 5 மொழிகளிலும் அந்தந்த துறையின் மிகப்பெரிய ஆளுமைகளால் வெளியிடப்பட்டது. இந்தியில் சுனில் ஷெட்டி, தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தமிழில் விஜய் சேதுபதி, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர்.
அர்ஜூன் ஜான்யா இசையமைக்க, கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம், ஹர்ஷா ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். இந்திய சினிமாவின் கொண்டாடப்படும் ராம் லக்ஷ்மண் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர். கே ரவி வர்மா, லார்னெல் ஸ்டோவால் ஆகியோர் குத்துச்சண்டை காட்சிகளை வடிவமைக்க, ஏ விஜய் குஸ்தி காட்சிகளை வடிவமைத்துள்ளார். கிருஷ்ணா, மது, கண்ணன் (திரைக்கதை), நிதின் லுகோஸ் (ஆடியோகிராஃபி), யோகி-சேத்தன்-கணேஷ் (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.