தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள காலவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-
அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. அரசியலை கண்காணிக்க வேண்டும்.
பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை. பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது.
மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு நான் வந்துள்ளேன். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்க தயங்க வேண்டும்.
மனிதனுக்கு பல பரிமாணங்கள் உண்டு, அதில் முக்கியமானது கலை. உங்களை போல கல்லூரி வாழ்க்கை அமையும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை, என் பாதை அமைய எனக்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்துல் கலாம் மாணவர்களை நோக்கி கேட கேள்வியை நானும் கேட்கிறேன். அரசியல் சார்பு, விழிப்புணர்வு நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அரசியலை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.
அது தான் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருக்கப் போகிறது. நான் ஒரு கலைஞன், எனக்கு அரசியல் வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்.
ஆனால் அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை சரியாக செய்யவில்லை. யார் அந்த வேலையை செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருப்பதை விட நாமே அதை கையிலெடுக்க வேண்டும்.
மகளிர் தினம் என்று இந்த ஒரு நாளை மட்டும் கொண்டாடக் கூடாது. 365 நாட்களும் மகளிர் தினம் தான். பெண்களின் உரிமைக்கான போராட்டங்கள் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்.
உலகமே யோசித்து கொண்டிருந்த வேளையில் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வந்தார். என் குடும்பத்தில் கூட பெண்கள் தான் அதிகம்.
என்னை பற்றி எனக்கு தான் தெரியும், என்னை நான் தான் அதிகம் விமர்சிப்பவன், விரும்புபவன். உங்களோடு அந்த மாணவர் கூட்டத்தில் மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன்.
மக்கள் நீதி மய்யம் உங்களை போன்ற இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறது. நீங்கள் இல்லாமல் இந்த நாடு முன்னோக்கி நகராது. உங்கள் பின்னால் நிற்க நான் தயாராக இருக்கிறேன்.
நான் ஒரு கலைஞனாக மட்டும் சாகக் கூடாது. உங்களுக்கு சேவை செய்து கொண்டே என் உயிர் போக வேண்டும். சிறப்பான தமிழ்நாட்டில் நீங்கள் வாழ்வதை நான் பார்ப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
இங்கு நான் யாரையும் பின் தொடர்பவர்களாக பார்க்கவில்லை, எல்லோரும் நாளைய தலைவர்கள். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் நீங்கள் தான் அதை மலர வைக்க வேண்டும்.
பொது மக்கள் தான் மாற்றத்திற்கு உதவ முடியும். அரசியலை கவனியுங்கள், தவறாமல் வாக்களியுங்கள். இப்போது யாரும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் அரசியலில் எல்லோரும் இருப்பீர்கள். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இருவரை நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சந்தித்தேன். அங்கு இருந்த 17 பேர் தமிழ்நாட்டுக்காக, என்னுடைய நம்பிக்கைக்காக திட்ட வரைவு உருவாக்குவதில் உதவியிருக்கிறார்கள்.
மய்யம் என்பது நடுவில் நிற்பது அல்ல, அது ஒரு தராசு முள் போன்றது. நடுவில் இருந்து இரண்டையும் கவனித்து நல்லவற்றின் பக்கம் நின்று நேர்மையான முடிவை எடுப்பது.
மய்யத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் பொறுப்பு உங்களுக்கு புரியும். மிகவும் கடினமான விஷயம் அது” என்றார்.
இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் சாலிவாகனன், வேல்ஸ் பல்கலை கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், ப்ரீத்தா ஐசரி கணேஷ், கலா விஜயகுமார், சுனிதா நாயர், மோஷிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
I wish to serve to society till my last breath says Kamalhassan