தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் பிரபல தொழிலதிபர் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.
இந்த பெண் தயாரிப்பாளர் தன் வாழ்க்கையில் இரண்டே படங்களை மட்டும்தான் பார்த்துள்ளாராம்.
பாக்யராஜின் உதவி இயக்குனரான சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
பாண்டிராஜின் மகன் பிருத்விராஜன், மலையாள நடிகை வீணா இருவரும் இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
மேலும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
உத்தமராஜா என்பவர் இசையமைத்துள்ள இந்த தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்களான பெப்சி தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்கே.செல்வமணி அவர்களும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்கே.செல்வமணி பேசியதாவது…
“கடந்த ஐம்பது வருட காலமாகவே சினிமாவை, ஒரு தொழிற்துறையாக அங்கீகரிக்காமல், குடிசைத் தொழில் போல நடத்தி வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு தான், சமீபத்தில் நீண்ட வேலைநிறுத்தம் நடத்த வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது.
சினிமாவில் இருந்து ஆட்சிக்கு வந்தவர்களும் கூட இதை ஒரு தொழிற்சாலையாக மாற்றாமல் விட்டுவிட்டார்கள்.
பொதுவாக வேலைநிறுத்தம் நடத்தினால் சினிமாவில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள்.
ஆனால் நாங்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்து முடிக்கும்போது பார்த்தால், வெளியேயும் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தயாரிப்பாளரை தவிர அனைவருக்கும் நஷ்டம்.
தயாரிப்பாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தின்போது நஷ்டமடையாமல் காப்பாற்றப்பட்டார்கள்.
ஒருவகையில் தயாரிப்பாளரும் விவசாயியும் ஒன்று. இரண்டுபேருமே அவரவர் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாது.
இந்த துறையை சரியாக கட்டமைக்காமல் விட்டதால் ஆளாளுக்கு ஒரு பக்கமாக தங்கள் போக்கில் இழுக்க ஆரம்பித்தார்கள். அதனால் சரியான திசையில் சினிமா செல்லமுடியவில்லை.
சினிமா என்கிற இந்த குளத்தை சுத்தம் செய்வதற்காக வலையை வீசியபோது நிறைய திமிங்கலங்கள் மாட்டின.
தயாரிப்பாளர்கள் என்கிற மீன்களை காப்பாற்ற, அந்த திமிங்கலங்களை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டுத்தான் ஆகவேண்டும். இதை தயாரிப்பாளர்கள் என்கிற மீன்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு பாடல் ஹிட்டானால் அதை வாங்கி விற்பவர்களுக்கு 30 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.
ஆனால் அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு 30 ரூபாய் கூட கிடைப்பதில்லை. இது என்ன சிஸ்டம்..? நாங்கள் உருவாக்கிய அந்த பாடல்களை எங்கள் விழாக்களில் நாங்கள் பயன்படுத்துவதற்கே, வெறும் 12 பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.
ஆனால் அந்த 12 படங்களின் பாடல்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒருநாளைக்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது யார்..?
பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வேறு யாரோ சம்பாதிக்கிறார்கள்.. ஆனால் நமக்கோ பல நூறு ரூபாய்களை பார்க்க முடியவில்லை.
எல்லா மாநில சினிமாவுக்கும் ஒரு வீடு.. ஒரு வாசல்.. ஆனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல். அதனால் யார் வேண்டுமானாலும் எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம் என்கிற நிலை. டைட்டில் பதிவு செய்யும் குழப்பங்கள் கூட இதனால் தான்.
இப்போது நடைபெற்ற போராட்டம் கூட, தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் தங்கள் கைக்காசை போட்டு மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், முந்தைய படத்தின் வருமானத்தில் இருந்து கொடுக்கும் நிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது தான்.
தயாரிப்பாளர்கள் யாரையும் நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை.. அவர்களுடன் எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை.. இதைத் தயாரிப்பாளர்கள் அனைவரும் புரிந்துகொண்டு ஒத்துழைத்தால் தமிழ்சினிமா சுபிட்சமாக இருக்கும்” என்றார்.
அடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…
“சமீபத்தில் நடைபெற்று முடிந்த வேலைநிறுத்தம் வெற்றி என எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள்.. அதற்கு ஒரு பிரஸ்மீட்டும் வைத்து அறிவித்துவிட்டார்கள். அதனால் நான் குறை ஏதும் சொன்னால் அது தவறாகப் போய்விடும்.
ஆர்.கே.செல்வமணி அண்ணன் இந்த சமயத்தில் இயக்குநராக படம் இயக்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
அப்போதுதான் எங்கள் கஷ்டம் உங்களுக்கு புரியும். சினிமாவில் எப்போதும் பெரிய நடிகர்களை சுற்றிக்கொண்டே இல்லாமல் புது ஆட்களும் வளரட்டும். அதனால் இந்த நடிகரை வைத்து இவ்வளவு சம்பளம் கொடுத்து இந்த பட்ஜெட்டுக்குள் தான் படம் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்களின் சுதந்திரத்தை நசுக்க வேண்டாம்.
இதுபோன்ற கட்டுபாடுகள் இருந்தால் விஜய்சேதுபதி வந்திருக்க முடியுமா? இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் சினிமாவுக்கு வந்திருக்க முடியுமா?
கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு யாரை வைத்து படமெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை கூட இல்லையா..?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக மீண்டும் மைக் பிடித்தார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அப்போது அவர் பேசியதாவது…
“தயாரிப்பாளர்களுக்குள் புரிதல் இல்லை என இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு நாங்கள் தயாராக இல்லை.
எனக்கு ரூ. 2 கோடி சம்பளம் கிடைக்கும். அந்த படம் ஓடினாலும் ஓடவிட்டாலும் எனக்கு சம்பளம் கிடைத்துவிடும்.
பணம் இருக்கிறதே என நீங்கள் விரும்பிய ஆட்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்து விட்டால், பின்னால் வரும் தயாரிப்பாளர்களை அது பாதிக்கும்.. அதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள்.
படம் எடுக்கும்போது உள்ள பிரச்சனைகளை சொல்லுங்கள்.. சரி பண்ணுகிறோம்.. கடந்த வருடம் வரை நடந்த விஷயங்களை இனி பேசவேண்டாம்.. கோடிகளைக் கொட்டி படம் எடுக்கிறீர்கள்.
டெக்னீசியன்களுக்கு கொடுத்த சம்பளம் போக மீதிப்பணம் உங்களுக்கு திரும்பி வந்துவிட்டதா..? நஷ்டம் தானே.. இனி அது இன்னொரு தயாரிப்பாளருக்கு நேரக்கூடாது.. அதுதான் எங்கள் நோக்கம்”. என்று அதிரடியாக பேசினார்.
Fefsi President RK Selvamani and Producer Suresh Kamatchi clash on Thodraa audio launch