தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2005ல் வெளியான படம் ‘அந்நியன்’.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டு இருந்தார்.
வசூலிலும் வரவேற்பிலும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இப்பட ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார் ஷங்கர் என்பதை அதிகார அறிவிப்புக்கு முன்பே நம் தளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
பென் மூவிஸ் தயாரிக்கவுள்ள இப்பட ரீமேக்கில் விக்ரம் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளது.
இதனைஅடுத்து ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஷங்கருக்குக் கடிதம் ஒன்றை இன்று (ஏப்ரல் 15) காலை அனுப்பினார்.
அதில்…
‘அந்நியன்’ கதைக்கான உரிமை என்னிடம் உள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளன.
இதன் கதையை என்னுடைய அனுமதியின்றி தழுவுவதோ, ரீமேக் செய்வதோ முற்றிலும் சட்ட விரோதம் ஆனது” என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் அனுப்பிய அந்த கடிதத்துக்கு, இயக்குநர் ஷங்கர் தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் ஷங்கர் கூறியிருப்பதாவது…
‘அந்நியன்’ திரைப்படத்தின் கதைக்கு நீங்கள் உரிமை கோரிய மின்னஞ்சலைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.
கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படம் வெளியானது.
படத்தின் திரைக்கதையை எழுத யாரையும் நான் நியமிக்கவில்லை. எனவே, இந்தத் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது.
அந்த படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும் எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.
மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
அவர் இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.
வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.
திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்குள்ளது.
நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளை கோர முடியாது. இந்த படத்தை ரீமேக் செய்யவும் முடியாது.
ஏனென்றால் அந்த உரிமை எழுத்துப்பூர்வமாக உங்களுக்குத் தர வில்லை.
ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையில்லாமல், உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் அநியாயமாக உங்களுக்கு ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள்.
இதுபோன்ற மோசமான, சட்டவிரோதமான உரிமை கோரல்களால் எனது எதிர்கால திரைப்படங்களைப் பாதிக்க முயலும் நிலையில் ஒரு இயக்குநராக, கதாசிரியராக உண்மையான நிலை குறித்த தெளிவைத் தரவே எந்தவித பாரபட்சமும் இன்றி இந்த பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.”
இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Director Shankar’s Reply to Producer Aascar Ravichandran