தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2005-ம் ஆண்டு பேட்டி முடிந்ததும் தன்னை வீட்டில் விடுவதாக காரில் ஏற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை மீ டூ பரப்புரையில் குற்றம் சாட்ட உடனடியாக செய்தியாளர்களைச் சந்தித்த சுசி கணேசன் அதை மறுத்தார்.
மேலும், லீனா மணிமேகலை மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் சுசி கணேசன் இயக்கத்தில் ‘திருட்டு பயலே 2’ படத்தில் நாயகியாக நடித்த அமலா பால், லீனா மணிமேகலைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அமலாபால் கூறியிருப்பதாவது:
இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன்.
பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குநராக அந்தப் பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது.
நான் அவர் இயக்கிய ‘திருட்டு பயலே 2’ படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், இயக்குநர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன்.
இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் அறிகிறேன்.
அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஈஸியாக இரையாக்கி விடுகிறது.
அங்கிங்கு எனாது படி அனைத்து தொழில்களிலும், துறைகளிலும் இந்தக் கொடுமை நடந்து வருகிறது.
தங்களது மனைவியையும், மகள்களையும் போற்றிக் காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்திக்கொண்டே இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை, கலைச் சேவை மற்றும் ஆன்மிகத் துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.
ஆன்மிகத் துறையிலும், கலைத் துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவரத் துவங்கி உள்ளன.
இதேபோல மற்ற துறைகளிலும், குறிப்பாக அங்கீகரிக்கபடாத மற்ற துறைகளில் இருந்தும் #Metoo குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும்.
அரசாங்கமும், நீதித்துறையும் எதிர்காலத்தில் இவ்விதக் கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு முன்னிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல் படுத்த வேண்டும்.
அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும்.”
இவ்வாறு அமலாபால் தெரிவித்திருக்கிறார்