சமூகத்தையே குற்றவாளியாக்கியது பொள்ளாச்சி சம்பவம்..: சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொள்ளாச்சி பாலியல் கொடுமை பற்றி பல நடிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தன் கண்டன பதிவை ஒரு வீடியோவாக பதிவிட்டு இருந்தார். தற்போது நடிகர் சூர்யாவும் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு….

அடிக்கடி நெருடலாக எனக்குள் வந்து போவதுண்டு. ஆண் குழந்தையின் உடல் மீது எனக்கு எவ்விதமான கற்பிதங்களோ, ஒழுக்க வரையறைகளோ இருப்பதே இல்லை. ஆனால், பெண் குழந்தையின் உடல் குறித்து, என்னையறியாமலேயே நிறைய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் திணித்துக்கொண்டே இருக்கிறேன்.

‘நீ எப்படி உடுத்த வேண்டும், நீ எப்படி உட்கார வேண்டும், மற்றவர்கள் பார்வைக்கு உன்னை எப்படி வெளிப்படுத்த வேண்டும்’ என்பதுபற்றி, சமூகம் எனக்குக் கற்றுக் கொடுத்த வரைமுறைகளை அறிவுரையாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

’துணிவு மிக்க பெண்ணாக’ மகளை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கும், என் செயலுக்கும் இடைவெளி இருப்பதை என்னாலேயே உணர முடிகிறது.

குழந்தைப்பேறு காலத்தில், மனைவியுடன் மருத்துவமனை செல்லும்போதெல்லாம் ஒரு வாசகம் மனதை நெருடும். ‘தாயின் கருவில் இருக்கிற குழந்தை, ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றம்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

படித்தவர்களும், பணக்காரர்களும் வந்துபோகிற மருத்துவமனையில்கூட இப்படி எழுதிப்போட வேண்டிய அவலத்தில் வாழ்கிறோமே என்று வெட்கமாக இருந்தது. பெண் வெறுப்பிலும், எதிர்ப்பிலும் இங்கே படித்தவர்கள், பாமரர்கள்; ஏழைகள், பணக்காரர்கள் என்கிற எந்த வேறுபாடும் இல்லை.

சுமத்தப்படும் பெருமை

இது ஆண்களுக்கான உலகம்; இங்கே பெண்களுக்கு இடமே இல்லை என்று அர்த்தமல்ல. ஆனால், ‘கற்பு, ஒழுக்கம், கலாச்சாரம், குடும்பக் கௌரவம், சாதிப்பெருமை, மதக் கட்டுப்பாடு’ என நிறைய ‘ஆண் பெருமை’களைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் இங்கு இருக்கிறது.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றிய படியே, ஆண்களின் ‘கருணை’யில் அவர்களின் வசதிக்கேற்ப, தேவைகளைப் பூர்த்திசெய்து, மனம் கோணாமல் பெண்கள் இவ்வுலகில் இருந்துகொள்ளலாம்.

சிரித்த முகத்துடன், உடையில்லாமல் நிற்கிற ஒரு வயது பெண் குழந்தையிடம், நம்முடைய ‘மானப் பிரச்சனை’யை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரசாரம்செய்ய தொடங்குவதில் ஆரம்பிக்கிறது நம்முடைய வன்முறை.

இதிகாசமாக, வரலாறாக, பண்பாடாக, வீரமாக நாம் கொண்டாடுகிற அனைத்திலும் பெண் உடலுக்கு எதிரான அந்தக் கருத்தியல் வன்முறை நிரம்பி வழிகிறது.

கடவுளின் அவதாரமாகவே இருந்தாலும், நெருப்பில் இறங்கித்தானே இங்கே ‘கற்பை’ நிரூபித்து அவள் மீண்டு வர வேண்டும்! ‘என் மனைவியின் ஒழுக்கத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவள் நலமுடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி. கற்பாவது, வெங்காயமாது’ என்று சொல்லும் தைரியம் இங்கே நம்முடைய கடவுளுக்கேகூட இல்லையே

சில வருடங்களுக்கு முன்பு, சேலத்தில் ஒரு பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறான் அவளுடைய முன்னாள் காதலன்.

அந்தப் பெண் தன் வீட்டில் உண்மையைச் சொல்கிறாள். ‘குடும்ப மானத்தைக் கெடுத்துட்டியே’ என்று அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அந்த புகைப்படங்கள் மேலும் இணையத்தில் பரவிவிடக் கூடாது என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால், ‘இப்படி பொண்ணை பெத்து ஊர் மேய விட்டுட்டு, இப்ப வந்து நில்லுங்க’ என்று பெற்றோரையே வசை பாடுகிறார் காவல் அதிகாரி.

இந்த அவமானத்தையெல்லாம் மீண்டும் அந்தப் பெண்ணின் மீது கொட்டுகின்றனர் பெற்றோர். கொடுமை தாள முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள். உடலை படம் பிடித்து மிரட்டியவனைகூடப் போராடி எதிர்கொண்ட அந்தப் பெண்ணால், தன் நிலையுணர்ந்து துணை நிற்க வேண்டிய குடும்பமும், சமூகமும் எதிராக திரும்பும்போது போராட முடியவில்லை; உயிரை மாய்த்துக்கொண்டாள்.

சிதைக்கப்படும் நம்பிக்கை

தன்னை காதலிக்கும் ஒருத்தனை நம்பாமல், ஒரு பெண் வேறு யாரை நம்புவாள்? பெண்களின் நம்பிக்கையை உடைக்கிற ஆண்கள் உயிரோடு வலம் வருகிறார்கள். ஆனால், ‘மானம் காக்கும் வீரர்கள்’ குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண்களையே தண்டிக்கிறார்கள்.

பாதிப்புக்கு ஆளான பெண்களுக்கு, இந்தச் சமூகத்தில் தொடர்ந்து வாழ்கிற தண்டனையைவிட, தற்கொலை என்கிற தவறான முடிவு எளிய தீர்வாக இருக்கிறது என்றால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டாமா?

சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியான, பாலியல் தொந்தரவுக்கு ஆளான ஒரு சிறுமியின் தந்தை எழுதிய கட்டுரையைப் படித்தபோது நெஞ்சை உலுக்கியது.

தன் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றபோது, ’செக்ஸ் கம்ளைண்ட் குடுத்தது யாரு?’ என்று பலரின் முன்னிலையில் குரல் உயர்த்தி கேட்கின்றனர் காவலர்கள்.

இரவு பதினொரு மணிக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு நீதிபதி வீட்டிற்குப் போகிறார்கள். அவர் தூங்கிக் கொண்டிருக்க, நான்கு மணிநேரம் அந்த நள்ளிரவில் காத்திருகிறது அந்தக் குழந்தை. அதற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்கு போனால் அங்கும், ‘ஒரு குழந்தையைக் கையாளுகிறோம்’ என்ற உணர்வே இல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் நடந்துகொள்கின்றனர்.

‘அந்த நபர், வேறொரு குழந்தைக்கு பாலியல் தொந்தரவு தந்துவிடக்கூடாது’ என்ற நோக்கத்திற்காக புகார் கொடுக்க சென்றவரை சட்டமும், சமூகமும் நடத்திய விதம் ஒரு சோறு பதம்.

பெண் வெறுப்புப் பிரச்சாரம்

இதோ ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறது பொள்ளாச்சி சம்பவம். கொடூரமான பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் துணிந்து புகார் அளிக்கிறார்.

ஆனால், அந்தப் பெண்ணைப் பற்றிய எல்லா விவரங்களும் காவல் துறையின் மூலமாகவே வெளியானதும், அந்தக் குடும்பம் மிரட்டப்பட்டதும் நம்முடைய அலட்சியத்தையும் அமைப்புகளின் சரிவுகளையும் தோலுரிக்கிறது. இந்த நிகழ்வை ஒட்டி, பொதுவாக இரண்டுவிதமான எதிர்வினைகள் வருகின்றன. ’பெண்களே இதைப் பார்த்தாவது திருந்துங்கள்.

அறிமுகம் இல்லாத ஆண்களை நம்பாதீர்கள்’ என்று அன்போடு அறிவுரை சொல்கிறது ஒரு கூட்டம். ‘ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையுமா?’ என்று இந்த நேரத்திலும் பெண் வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறது இன்னொரு கூட்டம்.

பெண்கள் மீதான இத்தகைய ‘அன்பு’, ‘வெறுப்பு’ இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். ‘ஆண்கள் அப்படிதான் இருப்பார்கள். நீங்கள் அடங்கி ஒடுங்கி இருங்கள்’ என்பதே அது.

அறிமுகம் இல்லாத எந்த ஆணையும் நம்பாதே என்று பெண்களுக்கு சொல்கிற நாம், ஏன் ‘பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்’ என்று ஆண்களுக்குச் சொல்லத் தவறுகிறோம்? ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று வீட்டின் முன்னே எச்சரிகை வாசகம் இருப்பதைப் போல, ஒவ்வொரு பெண்ணும், ‘ஆண்கள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்தை மனதில் ஒரு எச்சரிக்கைப் பலகையை மாட்டிக்கொண்டு அலைய வேண்டுமா?

தொழில்முறைக் குற்றவாளிகள்

பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் காட்சிப் பதிவுகளில் உள்ள பெண்களின் கதறல் நம் ஈரக்குலையை அறுக்கிறது. தனிப்பட்ட இச்சைக்காக மட்டும் அந்தக் கயவர்கள் இதைச் செய்யவில்லை.

பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, மிரட்டி காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள். மறுத்த பெண்களை அடித்து, துன்புறுத்தியிருக்கிறார்கள். வசதியானவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக இதை ஒரு ‘தொழில்’ ஆகவே செய்துவரும் இவர்களைத் தொழில்முறைக் குற்றவாளிகளாகவே கருத வேண்டும்; கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.

அதேசமயம், இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டதோடு பிரச்சினை முடிந்துவிடும் என்று நாம் நினைத்தால், அது அபத்தமானது.

பெண்ணின் உடலை வைத்து இந்தச் சமூகம் ஆடுகிற கேவலமான விளையாட்டின், சிறிய விளைவுதான் பொள்ளாச்சி சம்பவம். நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஏன் எந்தப் பெண்ணும் முன்வந்து நம் சட்டத்திடமும், நீதியிடமும் பாதுகாப்பு கோரவில்லை? நம்பிக்கைக்குரிய ‘ஆண்கள்’ நிரம்பி இருக்கிற வீட்டிலும், தாங்கள் மிரட்டப்படுவதைச் சொல்லவிடாமல் அந்தப் பெண்களை எது தடுத்தது?

அவர்களுக்கு நிகழ்ந்த அநீதியைவிட, அதை முறையிட்டு தீர்வு தேட முடியாத நம்முடைய கொடூரச் சூழல் மேலும் அபாயகரமானது இல்லையா? ‘என்னை இப்படி தலைகுனிய வெச்சிட்டீயே’ என்று ஓலமிடுகிற அன்பானவர்கள்தான், ‘ஆபாசத்தை வெளியே பரவ விடுவேன்’ என்ற குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பெண்கள் பலியாக முக்கியமான காரணமாகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒருவகையில் நிகழ்ந்திருக்கும் குற்றத்தில் நமக்கும் முக்கியமான பங்கிருக்கிறது. ‘யார் உன்னை மிரட்டுகிறானோ, அவனைப் பொதுவெளியில் நிறுத்தி அசிங்கப்படுத்து. சிறைக்கு அனுப்பு.

நாங்கள் உன்னோடு இருக்கிறோம்’ என்று குடும்பம் சொன்னால், இந்த மிரட்டல் ஒருபோதும் பலிக்காது. சட்டத்தைவிட, நம் பெண்களுக்கு இந்தப் பாதுகாப்புணர்வுதான் பலம் கொடுக்கும்.

குடும்பத்தாலும், சமூகத்தாலும் தன் உடலை வைத்தே பலவீனமாக வளர்க்கப்படுகிறாள் பெண். சமூக விரோதிகள் அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிரச்சினையின் வேர் நம்மிடம்தான் இருக்கிறது. சிக்கிவிட்ட நான்கு குற்றவாளிகளின் மீது கல்லெறிந்துவிட்டு, பெண்களுக்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமாக நாம் நிகழ்த்துகிற குற்றங்களை மறைக்க முயற்சிக்கிறோம்.

பெண்களுக்குத் துணை நிற்போம்

கோவை மண்ணிலிருந்து படித்து முடித்து வெளியூரில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் முகநூல் பதிவு என்னை மிகவும் நெகிழச் செய்தது. “எவனாச்சும் உன் போட்டோ, வீடியோவ வெச்சி மிரட்டினா பயப்படாத. ‘என்ன வேணா பண்ணிக்கோடா.

உலகத்துல இருக்கிற எல்லா பொண்ணுக்கும் இருக்கிற உடம்புதான் எனக்கும் இருக்குனு சொல்லு’ என்று தொலைபேசியில் கூறிய தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழ வேண்டுமென்று தோன்றியது” என்று அந்தப்பெண் எழுதியிருந்தார்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகைய நம்பிக்கை நிறைந்த, பாதுகாப்பான இடமாக குடும்பங்கள் மாறாதவரை, இந்தக் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும். இந்த மாற்றத்தின் முதல் முயற்சியாக, ‘பெண்ணின் வெற்றுடல் ஆபாசமானதல்ல ’ என்ற முழக்கம் நம் குடும்பங்களில் இருந்து ஒலிக்கட்டும்.

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாருக்கும் அஞ்சாமல் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நீதிமன்றம் உறுதிசெய்து, இக்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும்.

அதேசமயம், ‘என் உடலை வைத்து நீ என்னை பணியச் செய்ய முடியாது. உன் வக்கிரத்தைவிட என் வெற்றுடல் ஆபாசமானது இல்லை’ என்று பெண்கள் துணிந்து நிற்பதும், அதற்குத் துணையாக நாம் இருப்பதும் அனைவரின் கடமை.

’பாலியல் வன்முறையை’விட ஆபத்தானது, பெண்களுக்கு எதிராக நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்முறை என்பதை உணருவோம்.

-சூர்யா

Actor Suriya talks about Pollachi sexual abuse crimes

 

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத தமிழகம்..; எடப்பாடிக்கு கமல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். எனவே இதனையடுத்து ஒரே நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்… “அந்தப் பொண்ணோட அழுகுரல் கேட்டதுல இருந்து மனசு பதறுது. நிர்பயாவுக்கு நடந்த கொடுமையைக் கேட்டு ஊர் உலகமே ஒண்ணா திரண்டப்போ, தமிழக முதல்வர் ஒரு அறிக்கை விட்டாங்க.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடூரக் குற்றங்களாகக் கருதப்பட்டு, உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.

அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் அரசாங்கம், எப்படி இவ்வளவு மெத்தனமாகவும், கவனக் குறைவாகவும் இருக்க முடியும்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லேன்னு சொல்றதுல இருக்கிற மும்முரம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யும்னு சொல்றதுல இல்லையே.

குற்றவாளிகள் எல்லா வீடியோக்களையும் அழிச்சிட்டதா சொன்ன பிறகு அந்த வீடியோ மட்டும் எப்படி வந்தது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்றேன்னு சொன்ன தலைமையை (ஜெயலலிதா) பாக்கெட்ல போட்டோவா வெச்சிருக்க நீங்க, பெண்களுக்கு எதிரா நடக்கிற இந்த அநியாயத்துக்கு நீங்க என்ன பண்ணிருக்கீங்க.

நான் கேட்குற கேள்வியெல்லாம் உங்களுக்கு மிஸ்டர். சீ.எம். மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கேக்கல. இரண்டு பொண்ணுங்களோட அப்பாவா கேக்குறேன். என்ன பண்ணி, செஞ்ச தப்புகளுக்குப் பரிகாரம் பண்ணப் போறீங்க?

மகாபாரதமும் ராமாயணமும் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்கான போர்களைப்பற்றியது. தன் பொண்டாட்டிக்காக போருக்குப் போற கடவுளார்கள் வாழற இந்த நாட்டுல உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்கப் போறீங்க சாமி” என்று முதல்வர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடும் வகையில் கடுமையாக பேசியுள்ளார் கமல்ஹாசன்.

Kamals angry speech on Pollachi sexual abuse crimes

ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் “ஆர்.ஆர்.ஆர்”

300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.

அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் “ஆர் ஆர் ஆர்” படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க, உடன் சமூத்திரகனி நடிக்கின்றார். நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கின்றனர்.

இரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் 1920 களின் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகின்றது.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் இத்திரைப்படம் ஜூலை 30, 2020 உலகெங்கும் வெளியாகவுள்ளது.

“RRR” என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் படத்தலைப்பு. இருப்பினும், மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு சுருக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து அவர்களது அபிமான படத்தலைப்புகளை #RRRTitle என்ற ஹஷ்டக்குடன் ட்வீட் செய்யலாம். அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியாக தலைப்பாக இருந்தால் அதையே படத்தின் தலைபாக சூட்டுவோம் என்கின்றனர் படக்குழுவினர்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ”

இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்…இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இது பற்றி சங்கீதாவிடம் கேட்டோம்…

எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன்.

இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப் படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்..

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்

இசை – இளையராஜா

பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்

கலை – மிலன்

ஸ்டண்ட் – அனல் அரசு

எடிட்டிங் – புவன் சந்திரசேகர்

நடனம் – பிருந்தா சதீஷ்

தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

தயாரிப்பு – கெளசல்யா ராணி

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது…

யோகிபாபு நடிக்கும் “பட்டிபுலம்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு
“பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர்…

இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார்

கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்…இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர்…

மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ..ஆர்.கே.வர்மா

இசை..வல்லவன்

எடிட்டிங்…ஆர்.ஜி.ஆனந்த்

கலை..வீரசமர்..

நடனம் …விஜய் ரக்‌ஷித்

ஸ்டண்ட்.. மகேஷ்

பாடல்கள்..மா.கா.பா.ஆனந்த்..வல்லவன் கானா ராஜேஷ் கானா வினோத்

தயாரிப்பு மேற்பார்வை…அயன்புரம் ராஜு

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ்…இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்…

தயாரிப்பு …திருமுருகன்…

படம் பற்றி இயக்குனர் சுரேஷிடம் கேட்டோம்…

நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்…

அந்த பார்முலா படி யோகி பாபுவௌ இந்த பட்டிபுலத்தில் பயன் படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை ..படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார்.. அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப் படுத்தி இருக்கிறார்.

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு..அந்த ஊரில் உள்ள சில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது …ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பது தான் கதை…

இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்..

படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம்..

படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது..என்றார்.

ஹீரோ யார்..? சிவகார்த்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஸ்டர் லோக்கல் படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதன் பின்னர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவாகார்த்திகேயன்.

இப்பட பூஜை நேற்று போடப்பட்டது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“நான் காக்கா முட்டை படத்துக்கு வசனம், குற்றமே தண்டனை படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளேன்.

தற்போது என் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஹீரோ படத்தை இயக்க இருக்கிறேன்.

படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இப்பட தலைப்பை ஒரு வருடத்திற்கு முன்பே பதிவு செய்துள்ளேன்.

ஆனால் திடீரென்று சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹீரோ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஹீரோ தலைப்பு எங்களுக்கே சொந்தம். யாருக்கும் விட்டுத்தர முடியாது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுதவுள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

More Articles
Follows